காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கையும், ட்விட்டர் நிறுவனம் இன்று முடக்கியது. ட்விட்டர் நிறுவனத்தின் விதிகளை மீறியதால், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் சிறுமி பலாத்கார கொலையில், குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ட்விட்டரில் சாடிய கமல்
இதனையடுத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ட்விட்டர் விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பதிவில் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். அதில், “ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர, தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?” என வினவி பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா கமல்?
கமல்ஹாசனின் இந்த ட்விட்டர் பதிவு, மநீம, காங்கிரஸ் பக்கம் சாய்வதற்கான அறிகுறிகளைக் காண்பிப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் பாஜகவின் செயலை எதிர்த்து கேட்கப்பட்டுள்ள சரியான கேள்வி எனவும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கமலின் இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பீஸ்டுகள் சந்திப்பு : 13 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத காட்சிகள்!