சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அப்போது அவர், “தமிழக மக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். கடமையை செய்ய காத்திருக்கிறோம். தேர்தலில் ஏமாற்றம் எல்லாம் கிடையாது. நாங்கள் தப்பித்தோம் என பெருமூச்சுவிடவில்லை. நேர்மையான வழியில் செல்வதாக நம்பிக்கையூட்டுகிறது இந்தத் தேர்தல். நகர் புறங்களைவிட கிராம புறங்களில் அதிக வாக்குகள் பெறாததற்கு பாதுகாக்கப்பட்ட ஏழ்மைதான் காரணமென நினைக்கிறோம்.
24 மாதங்களே ஆன குழந்தையை ஊக்கம் கொடுத்து இப்படி எழுந்து ஓட விடுவார்கள் என்று நினைக்கவில்லை, எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வாக்களித்துள்ளனர். நேர்மையாக முயன்று வாக்குகளை பிரித்திருக்கும் எங்கள் வேட்பாளர்களை நாளைய வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இந்த தேர்தலின் மூலம் நேர் வழியில் சென்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க வெற்றியை வெற்றியாக மட்டுமே பார்க்கிறேன். மத்தியில் ஆளும் பாஜக மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தையும் வளர்ச்சிப்பாதையில் செல்ல அனைத்தும் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். விவசாயம் கெட்டுப்போகாத திட்டத்தை நாட்டிற்கு பா.ஜ.க கொண்டு வர வேண்டும். விவசாய இடத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தேவையற்றது” என்றார்.
மேலும் அவர், பயணம் நீண்டது என்பதுதான் இந்த 14 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கற்றுக்கொண்ட பாடம். தேர்தல் முடிவுகள் மக்கள் நீதி மய்யத்திற்கு பெரும் ஊக்கமாக உள்ளது. மக்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்குமான உறவு பலப்படும். தோற்றவர்களுக்கு ஆறுதல்தான் கூறமுடியும். சினிமா என்பது என் கலை, என் தொழில். அதேபோல் அரசியல் என்னுடைய தனிக்கடமை, நாடாளுமன்றம் செல்லும் தமிழக உறுப்பினர்கள் விவசாய பிரச்னைகளை அங்கு பேச வேண்டும் என வலியுறுத்துவோம்” என்றார்.