சென்னை: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “கல்லூரிக்குப் போக முடியவில்லை என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களெல்லாம் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று எனது அம்மா கூறும்போது சிறிய உறுத்தல் இருந்தது” என்றார்.
மேலும், “மணிப்பூரில் இருந்து வந்த மாணவர்களுக்கு லயோலா கல்லூரியில் இடம் கொடுப்பதற்கு என் பாராட்டுகள். மணிப்பூர் விளையாட்டு களம் அல்ல, அது போர்க்களம். மணிப்பூரில் இனி படிப்பும் நடக்காது, விளையாட்டும் இருக்காது, கலையும் வளராது. மணிப்பூர் மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து படிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். உங்களை எல்லாம் படிக்க வைப்பது திராவிட மாடல்தான். 2,000 ஆண்டுகளாக திராவிட மாடல்தான் எங்களுக்கு.
நாட்டை ஜனநாயக நாடாக மாற்ற வேண்டியது நம் கடமை. எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறீர்கள் என்று எனது தந்தையிடம் கேட்டேன். 17 வயது ஆகிறது, இப்போ என்னடா உனக்கு கல்யாணம் என கேட்டார். நீங்கள் மட்டும் 16 வயதில் கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டேன். வாக்காளர் அடையாள அட்டை வாங்காதவர்கள் அனைவரும் வாங்க வேண்டும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுரிமை கையில் கிடைத்து விட்டால் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
படித்த இளைஞர்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கு சென்று பேசாமல் முறைத்துக் கொண்டு நின்றால் போதும். அவர்கள் கேள்வி கேட்காமலே அனைத்தையும் சொல்லி விடுவார்கள். நகரத்தில் வசிக்கும் இளைஞர்கள் வார்டு சபை, பகுதி சபைகளுக்குச் சென்று கேள்வி கேட்க வேண்டும். சினிமாதான் எனது முதல் அடையாளம். சினிமா உலகம் என்னை மதிக்கவில்லை. அப்போது நான் 20, 21 வயதாக இருக்கும்போது தற்கொலை பற்றி யோசித்து உள்ளேன்.
தற்கொலை என்கிற தவறை நானே செய்ய முயற்சி செய்துள்ளதால் அதை பற்றி ஆலோசனை வழங்க எனக்கு அருகதை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எப்போதும் இருள் மட்டுமே இருந்து விடாது, வெயில் வந்தே தீரும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
மரணமில்லா ஒரு வாழ்க்கை முடியாத ஒரு கவிதை. மரணம் வரும், அதை நீங்கள் முந்திக் கொண்டு தவறு செய்தால் ஒன்றும் பண்ண முடியாது” என்றார். மேலும், நாட்டிற்கு தற்போது யார் அவசியம் என்கிற கேள்விக்கு, “காந்தி மாதிரி அல்லது காந்தியே திரும்பி வந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அது நடக்காது. காந்தி மாதிரி நீங்கள் எல்லோரும் வர வேண்டும்” என கமல்ஹாசன் பதிலளித்தார்.
அரசியலுக்கு வந்துவிட்டால் என் வாழ்க்கை என்னவாகும் என மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் வந்து விடும். மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் வேறு வழியின்றி ஜனநாயகத்தை வாழட்டும் என்று விட்டு விட்டு விலகி விடுவார்கள்” என்றார்.
இல்லத்து அரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் நான் கொடுத்த யோசன., அதை தமிழக அரசு எடுத்துக்கொண்டது என்றாலும், நான் பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன். 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதில் எத்தனை சதவீதம் நிஜம்? ஏனென்றால் பெண்கள் பதவி பெற்றாலும் ஆண்கள்தான் ஆதிக்கம், அதிகாரம் செலுத்துகிறார்கள். அது பெண் சுதந்திரம் ஆகாது, முழுமையானது ஆகாது. முழுமையாக கொடுத்து விட்டால் 50 சதவீதம் 5 வருடத்தில் வரும். நான் அரசியல் பற்றி பேசியது மாணவர்கள் உங்கள் நெஞ்சில் பதிந்திருந்தால் நாளை நமதே” என்று பேசி முடித்தார்.