கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் படித்த தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும்; மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உயரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், 4 மருத்துவர்கள் கொண்ட குழு மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும் சிறப்புப்படை அமைத்து விசாரணை செய்யவும் காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ‘நீதிமன்றத்தின் உத்தரவில் எங்களுக்குத் திருப்தி இல்லை. மறுபிரேதப் பரிசோதனைக்கு எங்கள் தரப்பில் குறிப்பிடக்கூடிய மருத்துவ நிபுணரை நியமிக்க வேண்டும். அதுவரை மறுபிரேதப் பரிசோதனைக்கான உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’ என உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பாக மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி சதீஷ்குமார், “ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது. வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் தனியாக கோரிக்கை மனு அளியுங்கள். உங்கள் தரப்பில்தான் வழக்கறிஞர் உள்ளாரே? நான் பிறப்பித்த உத்தரவில் திருப்தி இல்லையா?” எனக் கூறி ''ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது'' எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை