சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக்குழு ஆய்வு செய்துள்ளதாகவும், அதனால் பள்ளியை திறக்க அனுமதிக்கக்கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளியில் எல்.கே.ஜி முதல் முழுமையான அளவில் வகுப்புகளை தொடங்கத் தயாராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்துகளை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துகளுடன் நவம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சாமி கைது.!