ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கல்கி பகவான் ஆசிரமத்திற்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இதில், 44 கோடி ரூபாய் இந்திய பணம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம், ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 4000 ஏக்கர் அளவிற்கு நிலங்கள் வாங்கி விற்றதும், சோதனையில் அம்பலமானது. குறிப்பாக, ஆசிரமத்திற்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சட்டவிரோதமாகக் கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விளையாட்டுகளில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவித்ததும் தெரிய வந்துள்ளது.
ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணக்காரர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடையை குறைத்துக்காட்டி, அந்த பணத்தை சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்து முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்கி பகவான் அவரது மனைவியின் பெயரில் அம்மா பகவான் என்ற ஆசிரமம் அமைத்து அதற்காக நிதி வசூலித்தாகவும், கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா, அவரது மருமகள் ப்ரீத்தா ஆகியோர் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததும், அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் ரகசியமாக நிறுவனங்கள் ஆரம்பித்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சோதனையின்போது கிருஷ்ணா, அவரது மனைவி ப்ரீத்தாவிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
எனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள், சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான பத்திரங்கள் ஆகியவற்றை வைத்து தனித்தனியாக இருவரிடமும் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், முறைகேடாக 85 கோடி ரூபாய் ஹவாலா மூலம் அந்நிய நாட்டில் முதலீடு செய்தது, 20கோடி ரூபாய் அமெரிக்க டாலர் சிக்கியது குறித்து அமலாக்கத்துறையினர் அந்நிய மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் ஹவாலா பணம் சிக்கியது தொடர்பாக கல்கி பகவானின் கணக்காளரிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக கல்கி பகவான் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.