சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி ஒருவர், அளித்த புகாரின் அடிப்படையில், கல்லூரியின் நடனத்துறை உதவிப்பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஏப்ரல் 3ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன்கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஹரி பத்மன் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்று ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஹரி பத்மன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை (ஏப்ரல் 21) விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது கவனமுடன் இருக்க வேண்டும்: முதலமைச்சர் அட்வைஸ்!