ஜெயின் அன்னபூரணம் தொண்டு நிறுவனம் மூலமாக நாள்தோறும் இரண்டாயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று (மே.25) சென்னை ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ககன்தீப் சிங் பேடி, "சென்னையில் முழு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்துப் பொருட்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. காலை முதல் தலா ஒரு டன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 1, 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து அனைத்து மண்டலங்களுக்கும் விற்பனைக்குச் சென்றுள்ளது.
வாகனங்கள் அந்தந்த மண்டலங்களுக்கு சென்று அங்கிருந்து மூன்று சக்கர வாகனங்கள் மூலம் காய்கறிகள் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தள்ளுவண்டியில் காய்கறிகள், பழவகைகளை விற்பதற்காக மண்டல அலுவலகத்தை அணுகுபவர்களுக்கு, அனுமதிச் சீட்டு, மாநகராட்சி பேனர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாஸ்க் அணியாமல் காய்கறிகள் வாங்க வந்தால், அவர்களுக்கு காய்கறிகள் விற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காய்கறி விலைகளில் ஏற்படும் மாற்றங்களை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்ய வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு காய்கறிகளை விற்பவர்களின் வாகன உரிமம் ரத்து செய்யப்படும்.
மூன்று சக்கர வாகனம், தள்ளுவண்டி மூலம் காய்கறிகள், பழ வியாபாரம் செய்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினால் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசிக்கு தொடர்பு கொள்வோர் 044-45680200 என்ற எண்ணிலும், அலைபேசியில் தொடர்பு கொள்வோர் 9499932899 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்களும் ஏதாவது குறைகள் இருந்தால் மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு, குறைகளைத் தெரிவிக்கலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முதலில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.
1800 425 0111 எண்ணிற்குத் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யலாம். மேலும் 97007 99993 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காணொலி அழைப்பின் மூலமாக தடுப்பூசி செலுத்த வேண்டுமென தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்" என்றார்.