சென்னை: நேற்று முன்தினம் தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு திமுகவினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆளுநரின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "பெயரளவுக்குத்தான் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியே தவிர, அதன் மூக்கணாங்கயிறோ மத்திய பாஜக ஆட்சியிடம்தான் உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு நேரடியான அதிகாரம் கிடையாது. அப்படி இருந்தும் தமிழக ஆளுநர் அந்த அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறார்?
புதிதாக வரவுள்ள அரசுக்கு, உரிமை மீட்புப் பணிகளும் கடமைகளும் ஏராளமாக உள்ளது. மோடி அரசு, தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க, அதிமுக அரசினைக் குறி வைத்து, தனது உயரத்தை அதிகரித்து விட்டதாக ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் அளித்துள்ள மாநில உரிமைகளைக்கூட வலியுறுத்தி, நிலை நாட்ட எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு முன்வரவில்லை. மத்தியக் கல்விக் கொள்கை, இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிச் சட்டங்களை உடைத்துப் பின்பற்றத் தவறியது. புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்தவுடன், அவர் ஒரு இணை அரசாங்கம் நடத்தினர்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை, துணைவேந்தர்கள் நியமனம் என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாகவே இருந்தது. ஆனால் தற்போது துணைவேந்தர்கள் நியமனம் ஏனோ கோட்டையிலிருந்து ராஜ்பவனுக்கு மாற்றப்பட்டது. புதிய ஆட்சி வரும்வரை ஏன் ஆளுநர் காத்திராமல், அவசர அவசரமாக இரண்டு துணைவேந்தர்கள் பதவியை நிரப்புகிறார்? ஒரு பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு - அதுவும் அனுபவமற்ற ஒருவரைக் கொண்டு ஏன் நிரப்பியுள்ளார்?
இந்நடவடிக்கை அறம் சார்ந்ததா? ஜனநாயகத்திற்குரிய நடைமுறையா? ஆளுநர் நியமித்துள்ள பல துணைவேந்தர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினராக இருக்கிறார்கள் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இப்படி மாநிலத்தின் கல்வி உரிமைகளை வெளியிலிருந்து (மத்திய ஆட்சியால்) பறிக்கப்படுவதற்கும், மாநிலத்திற்குள்ளேயிருந்தே (ஆளுநர்) பறிக்கப்படுவதற்கும் முடிவு கட்டவேண்டும்" என்றார்.