இது தொடர்பாக் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் பேசினார்கள். நானும் பங்கேற்று உரையாற்றினேன்.
அந்தக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், சமுகநீதிக் கட்சியின் நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரும் கண்டித்துப் பேசினார்கள்.
அந்தக் கூட்டத்தில் பா.ம.க.வைப்பற்றி - அவர்கள் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவையே!
அதுபோல், பேசக்கூடியவர்கள் அல்லர் அவர்கள் என்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அவர்களும் அறிவார்கள்.
அப்படி இருக்கும்போது அவர்களைக் கடுமையாக சாடியிருப்பது தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதே நமது கருத்தாகும்.
அவர்களை அச்சுறுத்துவதும், தொலைப்பேசி மூலமாகக் கொலை மிரட்டல் விடுவதும் ஆரோக்கியமானதல்ல. இவற்றை நான் ஏற்கவில்லை என்கிற அளவிலாவது மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டாமா?
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஜாதியை வைத்துக் கலவரங்கள் என்பது வெட்கப்படத்தக்கதாகும். ‘‘பொன்பரப்பியோடு’’ இது முடிவுக்கு வரவேண்டும்.
தந்தை பெரியாரை மதிக்கும் மருத்துவர் இராமதாசு அவர்கள் இதுபோன்ற தருணங்களில் முந்திக்கொண்டு கண்டித்திருக்க வேண்டும்; மாறாக, ஒரு சார்பு எடுத்துப் பேசும்போது, அவர்மீதான நம்பிக்கை தகர்ந்துவிடுகிறது.
ஓரிடத்தில் நடந்திருந்தாலும் அந்தத் தீயை அணைக்க முன்வருவதுதான் ஒரு தலைமைக்கு அழகானதாகவும் இருக்க முடியும்.
அதனை மேலும் விசிறி விட்டு வேறு பகுதிகளுக்கும் பரவ விடுவது ஆபத்தானது. நல்ல தலைமைக்கு அது அழகானதாகவும் இருக்க முடியாது.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் வருணாசிரம அடிப்படையில் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எவ்வளவோ சொல்லியிருக்கின்றனர்.
‘மட்டத்தில் உசத்தி’ என்று நாம் மார்தட்டப் போகிறோமா?
திராவிடர் கழகத்தின் கவலையெல்லாம் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஜாதி, மனிதத்தன்மைக்கு விரோதமானது.
தமிழகம் ஜாதி, மதக் கலவரங்கள் அற்ற பூமியாக - பெரியார் மண்ணாக, சமுகநீதிக் களமாகவே என்றென்றும் திகழவேண்டும். தேர்தல்கள் வரும் போகும் - அது நிரந்தரமல்ல!
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நான் வைத்த வேண்டுகோளையே இப்பொழுதும் வைக்கிறேன்.
தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்பதே முக்கிய வேண்டுகோள்.
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் சமுகநீதிப் பயணத்தில் கடந்து செல்லவேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
மத்தியில் உள்ள ஓர் ஆட்சி சமுகநீதியை ஒழித்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்துத்துவா கல்வியைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளது. நமது கவனம் அந்தத் திசையில் செல்லாமல் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்று அடையாளம் காண்பதில் தவறு இழைக்கக் கூடாது என்பதே திராவிடர் கழகத்தின் அழுத்தமான வேண்டுகோள்.
இந்தப் பிரச்சினையில் உதவுவதற்குத் திராவிடர் கழகம் என்றென்றைக்கும் தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நம்மிடையே பிளவு நமது பொது எதிரிகளுக்குக் கொண்டாட்டமாக ஆகிவிடக் கூடாதல்லவா?” என்று கூறியுள்ளார்.