ஆயிரம் விளக்கு தொகுதி, திமுக எம்.எல்.ஏ., கு.க. செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக, நேற்று (ஆகஸ்ட்.4) தகவல் வெளியானது. அதேபோல், கு.க. செல்வம் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நான் பாஜகவில் இணையவில்லை. தொகுதி பிரச்னைக்காக சந்தித்தேன்" என்றார்.
இதையடுத்து, கு.க.செல்வம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருப்பதால் அவர் வெளிப்படையாக பாஜகவில் இணைந்தால் கட்சி தாவும் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், பாஜகவில் இணைந்ததை வெளிப்படையாகக் கூறவில்லை என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து கு.க. செல்வத்தை திமுக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 5) எம்.எல்.ஏ., கு.க. செல்வம் டெல்லியிலிருந்து சென்னை வருவதாக இருந்தது. இதையறிந்து, கு.க. செல்வத்தை வரவேற்க விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
சென்னை விமான நிலையம் வந்த அவரை பாஜக தொண்டர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு வரவேற்றனர். விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் கும்பலாக கூடியதால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. பாஜக தொண்டர்கள் செயலைப் பார்த்து விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ., கு.க. செல்வம் தற்காலிகமாக நீக்கம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!