திருச்சி: மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியின் சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 29) மாலை நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.
இதில் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கே.என். நேரு, "1989இல் புலவருக்கு (பூ.ம. செங்குட்டுவன்) இந்தத் தொகுதியில் (மணப்பாறை) தேர்தலுக்குப் பணியாற்றினோம்.
பொன்னுசாமி இல்லை என்றால் திமுகவுக்கு வெற்றி இல்லை
அப்போது, காங்கிரஸ் 27 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தது. அப்படி கணக்குப் பார்த்துதான் நான்குமுனைப் போட்டி இருக்கும், காங்கிரஸ் தனித்து நிற்கும் என்று எண்ணிபோது, அவர்கள் அதிமுகவை ஆதரித்தனர். இதனால் நாம் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினோம். இங்கு மட்டுமல்ல; மதுரையிலும் தோல்வியடைந்துவிட்டோம்.
அதன்பிறகு 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட புலவரை நமது தலைவர் (கருணாநிதி) அறிவித்தார். அப்படி அறிவித்தபோது, முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமி கடைசி நேரத்தில் நமக்கு ஆதரவு தந்தார். அப்படி ஆதரவு தந்த காரணத்தால் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மணப்பாறை தொகுதியில் வெற்றிபெற்று அவர் அமைச்சராகவும் ஆனார்.
1989 லிருந்து இன்றுவரை 32 ஆண்டுகால சரித்திரத்தில் நான் சொல்கிறேன்... ஊராட்சியில் முழுக்க முழுக்க நீங்கள் (திமுகவினர்) வெற்றிபெற்றுவிடுவீீர்கள். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது நமக்கு வெற்றி கிடைக்காது, இதுதான் கடந்த கால வரலாறு. அன்றைக்குக்கூட (1996) பொன்னுசாமி இல்லையென்று சொன்னால் நாம் வெற்றிபெற்றிருக்க முடியாது.
இறைவனை வணங்கிய கையால் மற்றவர்களை வணங்க மாட்டேன்
பொன்னுசாமி உதவிபெற்றுதான், (அதுவும் அவர் செலவு செய்தார்) வெற்றிபெற்றோம். ஆனால் இந்தமுறை மணப்பாறையா... அங்கா... வெற்றிபெறுவீர்களா? அப்படியெல்லாம் எங்களிடம் பேசினார்கள். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்ற இடங்களில் வெவ்வேறு வகைகளில் பணியாற்றினார்கள்.
ஆனால் மணப்பாறையில் நமது கழகத் தோழர்களுக்கு அவர்கள் ஒரு உதவிகூட செய்யத் தவறிவிட்டார்கள். கடைசி நேரத்தில்தான் ஏதோ கொஞ்சம் உதவி செய்தார்கள், அப்படி உதவி செய்ததால்தான் மற்ற அனைத்துத் தொகுதிகளைக் காட்டிலும் மணப்பாறையில் அதிகபட்சமாக 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம்.
நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால் மணப்பாறையில் உள்ள கழகத் தொண்டர்களும், மக்களும் ஆதரிப்பது என்று ஆரம்பித்துவிட்டால் அதற்கு எல்லையே இருக்காது. நாகூர் ஹனீபா வாணியம்பாடியில் போய் நின்றார். அவர், 'இறைவனை வணங்கிய கையால் மற்றவர்களை வணங்க மாட்டேன், இஸ்லாம் நெறிமுறைகளிலிருந்து நான் வெளிவர மாட்டேன்' என்று சொல்லிவிட்டார். அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைந்துவிட்டது.
அப்துல் சமதுக்கு நாமத்தைப் போட்டார்கள்
மணப்பாறைக்கு அப்துல் சமது வந்தபோது நான், 'சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருவார். அவரது ஆதரவு உங்களுக்கு இருக்கும் நிச்சயமாகக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் உங்களுக்கு வாக்களிப்பார்கள். நீங்கள் பயப்படாமல் தேர்தல் வேலையைச் செய்யுங்கள்' என்று சொன்னேன்.
அதற்கு நம்ம ஆளுங்க அவர் தொப்பியெல்லாம் கழற்றி, அவருக்கு நாமத்தைப் போட்டு, கோயிலுக்குள்ள கொண்டுபோய்விட்டு திருநீறு பூசி, குங்குமம் வச்சு, சந்தனம் எல்லாம் அடித்துவிட்டார்கள்" என்று நகைச்சுவையோடு பேசினார்.
இதையும் படிங்க: சு.சுவாமியின் கருத்தைச் சுட்டிக்காட்டி பணமாக்குதல் திட்டத்தைச் சாடிய பிடிஆர்!