சென்னை: குப்பையில் போடும் பொருள்களைக் கொண்டு, ஆறிவியல்பூர்வமான கண்டுபிடிப்புகளை உருவாக்கிவரும், இளம் அறிவியலாளரைப் பற்றியதுதான் இத்தொகுப்பு.
சென்னை சின்னமலை பகுதியில் வசிப்பவர் அசாருதீன். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இளம் வயதிலேயே அறிவியல் மீதும், அறிவியல் ஆராய்ச்சிகள் மீதும், புதிய கண்டுபிடிப்புகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
இதன் காரணமாக தன்னுடைய பள்ளிப் படிப்பின்போது பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அதனைக் காட்சிப்படுத்தி பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். அந்த வகையில், டீசல், பெட்ரோல் இல்லாமல் காற்றில் இயங்கும் படகு, முதியோர் படிக்கட்டில் ஏற உதவும் உபகரணம் உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார் அசாருதீன்.
மக்கள் பயன்பெரும் வகையில் பொருள்கள்
டீசல், பெட்ரோல் இன்றி, முழுவதுமாகவே காற்றை மட்டுமே கொண்டு இயக்கப்படும் படகினை, டிராக்டர் டியூபை அடித்தளமாகக் கொண்டு, அதன்மீது காற்றடித்தால் சுற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு பொருத்தப்பட்டு, அதன் மூலம் படகு செல்லும் படியாக அமைத்துள்ளார் இளம் அறிவியலாளர். மேலும் நாம் எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டுமோ, அதற்கு ஏற்றாற்போல் படகைத் திருப்ப, இதற்கென தனி ஸ்டேரிங் அமைப்பையும் அசாருதீன் அமைத்துள்ளார்.
இதையடுத்து தண்ணீரில் நடக்கும் ஸ்கேட்டிங் போர்ட் ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது, படகுகள், கப்பல்கள் பழுதடைந்துவிட்டால், அதனை மற்றொரு சிறிய படகை கொண்டு சரிபார்க்க வேண்டியதாக இருக்கும். ஆனால் இவர் கண்டுபிடித்துள்ள ஸ்கேட்டிங் போர்டை பயன்படுத்தினால் எளிதாகப் பழுதுகளைச் சரிசெய்ய முடியும்.
இதனைத் தொடர்ந்து முதியோர் படியேற உதவும் உபகரணத்தைப் படைத்துள்ளார். இதற்கென சந்தையில் ஒரு உபகரணம் இருக்கிறது. அவை ரூ. 5000 முதல் ரூ. 6000 மதிப்பில் கிடைக்கிறது. ஆனால் இவர் கண்டுபிடித்துள்ள உபகரணங்கள் வெறும் 150 ரூபாயில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு எளிதாகப் படி ஏற முடியும்.
செவ்வாய் கிரகம் செல்லும் திட்டம்
மேலும் விதைகளை மண்ணில் விதைக்கும் உபகரணம், சோலாரில் இயங்கும் மிதிவண்டி போன்று பொதுமக்கள் பயன்பெரும் வகையில் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை எளிய முறையில் அனுப்பவும், அங்கு மண் இல்லாமல் வேளாண்மை செய்வது குறித்தும் ஆராய்ச்சி செய்துவருவதாக அசாருதீன் தெரிவித்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல்வேறு உபயோகமுள்ள பொருள்களைச் செய்துவரும் அசாருதீன், பொதுமக்கள் இதற்குத் தகுந்த ஆதரவு அளித்தால், இன்னும் பல கண்டுபிடிப்புகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.