சென்னை: சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் பகுதியைச் சேர்ந்தவர் வேதிகா (15). இவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு பள்ளிக்குச் சென்றவர் அன்று மாலை வீடு திரும்பாததால் வேதிகாவின் தந்தை கார்த்திக், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் காவல் துறையினர், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு (ஜூலை 20) தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் பள்ளி சீருடையுடன் சடலம் ஒன்று மிதப்பதாக பல்லாவரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பல்லாவரம் காவல் துறையினர், தாம்பரம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலத்தை மீட்டனர். விசாரணையில், அந்த சடலம் காணாமல் போன பள்ளி மாணவி வேதிகா என்பது தெரியவந்தது. சரிவர படிப்பு வராததால் பெற்றோர் படிக்க சொல்லி திட்டியதால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிரிழப்பு: ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள பள்ளப்பன் தெருவில் வசித்து வருபவர் செந்தமிழ். இவர் டீக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு நித்திஷ், நிதேஷ் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். நேற்று (ஜூலை 20) மாலை குழந்தைகள் முதல் மாடியில் உள்ள பால்கனி அருகே விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது நான்கு வயது குழந்தையான நித்திஷ் பால்கனியின் கம்பி மீது ஏறி உள்ளார். இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நித்திஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை நித்திஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை இன்று (ஜூலை 21) அதிகாலை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
போதைப்பொருள் விற்ற வடமாநில இளைஞர் கைது: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகவதி நகர் மெயின் ரோட்டில் எஸ்.கே.பட்ரா ஸ்டோர் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, பள்ளி மாணவர்கள், மற்றும் வட மாநில இளைஞர்கள் அடிக்கடி கூடி பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த சேலையூர் ரோந்து காவல் துறையினர் கடையை கண்காணித்தனர். அப்போது பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என சிலர் புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றதை கண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடைக்குள் புகுந்த காவல் துறையினர் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடையில் இருந்த வட மாநில இளைஞர் சந்தோஷ் குமார் பத்ரா (38), என்பவரை காவல் துரையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்து அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 70 கிலோ புகையிலை பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் வெளிமாநிலத்தில் இருந்து புகையிலை பொருள்களை வாங்கி வந்து புற நகர் பகுதிகளில் பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கேக் வெட்ட சென்ற இடத்தில் ஆளை வெட்டிய கொடூரம்: சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ் (25). ஆட்டோ ஒட்டுநரான இவர், நேற்று இரவு (ஜூலை 20) ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோ ஓட்டிச் சென்ற காமேஷை வழிமறித்து கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் காமேஷ் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 10 பேர் கொண்ட கும்பல் காமேஷை தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காமேஷ் தனது சகோதரனை செல்போன் மூலம் அழைத்து வர வைத்துள்ளார். அங்கு வந்த அவரது சகோதரர் சதீஷ் தட்டி கேட்டபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கேக் வெட்டிய பத்து பேர் கொண்ட கும்பல் காமேஷ் மற்றும் சதீஷை கத்தியால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
இதனை அடுத்து பலத்த வெட்டு காயமடைந்த காமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டு காயங்களுடன் உயிர் தப்பிய சதீஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அம்பத்தூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட காவல் துறை, உடற்கூராய்வுக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் உள்பட 10 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிறந்தநாளன்று கேக் வெட்டச் சென்றவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் புழக்கம் இருப்பதால் இளைஞர்களுக்கு இடையே மோதல் போக்கு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மழைநீர் வடிகால்வாயில் விழந்த குடிமகன் மீட்பு: வேளச்சேரி, கைவேலி, ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று இரவு (ஜூலை 20) மழைநீர் வடிகால்வாயில் ஒருவர் விழுந்து மிதப்பதாக வேளச்சேரி தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் வரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி மழைநீர் வடிகால்வாயில் விழுந்தவரை மீட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வடிகால்வாயில் இருந்த மீட்கப்பட்டவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெயர் பரம்தேவ் (22) என்பதும் அவர் ஆதம்பாக்கத்தில் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
குடிபோதையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோதியதால் பொதுமக்கள் அந்த இளைஞரை தாக்கியதால் பயந்து போய் ஓடிச் சென்று மழை நீர் வடிகால்வாய் குதித்ததாக விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை மாத்திரை உபயோகித்த 5 இளைஞர்கள் கைது: பின்னணி என்ன?