கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதனடிப்படையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணிபுரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாயா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று (அக்.09) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்றுக்கொண்ட, நீதிபதி உபாத்யாயாவை அரசு தலைமை வழக்கறிஞர் வரவேற்றார். நீதிபதி உபாத்யாயா, 1996ஆம் ஆண்டு குஜராத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கியவர். 2011ஆம் ஆண்டு குஜராத் நீதிமன்ற கூடுதல் நீதிபதி நியமிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தை பொருத்தவரை புதிதாக இன்னும் 10 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல், அளித்தபின் அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் எண்ணிக்கையில், தற்போது நீதிபதி உபாத்யாயாவுடன் சேர்த்து நீதிபதிகள் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி பரிந்துரை