சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 7 பேரையும் 31 ஆண்டுகளுக்கு பிறகு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்ட ஏழு பேரில் ஒருவரான முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அவரை திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
முருகன் மற்றும் நளினியின் மகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வசித்து வருகிறார். இதனால், இருவரும் அவர்களின் மகளுடன் லண்டனில் சேர்ந்து வாழ்வதற்கு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லண்டன் செல்வதற்கான விசா பெறுவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுவதால், அதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக புகைப்பட அடையாள அட்டையை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கடந்த மாதம் (செப்டம்பர்) அளித்த மனு, இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. மேலும் தனக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.31) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையில் இருந்து தான் விலகி கொள்வதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது முருகனின் மனு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகிகொள்வதாக தெரிவித்தது அனைவரது மத்தியிலும் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: சனாதனம் குறித்து தவறாக பேசியதாக அடிப்படை ஆதாரமின்றி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் வாதம்..!