சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்பி கனிமொழி, "மகாபாரதத்தில் திரெளபதி துகில் உரியப்பட்டது போலவே, மணிப்பூரிலும் பெண்களின் ஆடைகள் கழற்றப்பட்டன. அப்போது மணிப்பூர் பெண்களும் கடவுளை வேண்டியிருப்பார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற எந்த கடவுளும் வரவில்லை, அரசும் வரவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுகவினர் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சட்டப்பேரவையில் அவரது சேலையை இழுத்து அவமதித்தது திமுக. இப்போது நீங்கள் திரெளபதி குறித்து பேசுகிறீர்கள், அப்போது ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு பேசுபொருளான நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை எனக் கூறினார்.
இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமையை மறைத்து திமுக நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டினர். 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், கடந்த 1989ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? என்பது குறித்து, சம்பவத்தன்று சட்டப்பேரவையில் செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்தார்.
அதில், "கடந்த 1989ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஒரு சில ரகசியங்கள் இருப்பதாக காவல்துறைக்கு தெரிய வருகிறது. இந்த தகவல் அப்போது சென்னை மாவட்ட ஆணையராக இருந்த துரைக்கு தெரிவிக்கப்படுகிறது. அவர் உள்துறைச் செயலருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் மார்ச் 8ஆம் தேதி காலை 5 மணிக்கு நடராஜனின் இல்லத்தில் சில ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், ஜெயலலிதா அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் ஒரு கடிதம் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த சூழலில்தான் மார்ச் 25ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது.
அப்போது காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டப்பட்டது. சபாநாயகர் தமிழ் குடிமகன் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் பட்ஜெட் உரை தாக்கல் செய்யலாம் என சபாநாயகர் தெரிவித்தார். பட்ஜெட் உரை தாக்கல் செய்வதற்கு முன்பு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் குமரி ஆனந்தன், "பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் நண்பர் வீட்டில் அத்துமீறி நுழைந்து சில ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதற்காக, பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். அதை விவாதம் செய்து முடித்ததற்கு பிறகு பட்ஜெட் உரையை தாக்கல் செய்யலாம்" எனக் கூறினார்.
இதற்கு, பதில் கூறிய சபாநாயகர் தமிழ் குடிமகன், "பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வேறு எந்த தீர்மானமும் விவாதிப்பதற்கு சட்டப்பேரவையில் மரபு மற்றும் விதிகள் இல்லை. அதனால், வேறொரு நாள் இதற்கான விவாதத்தை வைத்துக் கொள்வோம். தற்பொழுது பட்ஜெட் கூட்டத்தொடர் உரையை தொடரலாம்" எனக் கூறினார்.
பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது ஜெயலலிதா எழுந்து நின்று, "என்னுடைய நண்பர் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயல் என்பது கிரிமினல் நடவடிக்கை. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் கருணாநிதி இந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு பதில் கூறிவிட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்" எனக் உரத்த குரலில் கூறினார்.
இதனையடுத்து, அதிமுகவில் உள்ள 26 சட்டமன்ற உறுப்பினர்களும் கொடுத்த பட்ஜெட் புத்தகத்தை கிழித்து எறிந்தனர். தற்பொழுது, பேரவைக்குள் முதலமைச்சர் இருக்கைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கும் இடையே இடைவெளி அதிகமாக உள்ளது. அப்போது, இருவருக்குமான இடைவெளி மூன்று அடிதான் இருக்கும். இருவருக்கும் ஒரு பொதுவான மைக் இருக்கும்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக துரை கருணா கூறுகிறார். இந்த நேரத்தில் அதிமுகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ, முதலமைச்சர் கருணாநிதி வாசிக்க வைத்திருந்த பட்ஜெட் புத்தகத்தை எடுத்து கிழித்தார். இதனையடுத்து, கருணாநிதி பின்புறம் லேசாக சாய்ந்தார். இந்த நேரத்தில்தான் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலு, "தலைவரை அடிக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என திமுக எம்எல்ஏக்களை பார்த்து கேட்டார்.
பின்னர், ஜெயலலிதாவுக்கு எதிரான கோஷங்களும், பேப்பர்கள் மற்றும் புத்தகங்களையும் இரண்டு தரப்பினரும் மாறி மாறி ஏறிந்து தாக்கிக் கொண்டனர். அப்போது, திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகிய இருவரும் சட்டப்பேரவை செயலரின் எழுதும் பலகையை எடுத்து ஜெயலலிதா மீது புத்தகங்கள் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஜி.கே.மூப்பனார், குமரி ஆனந்தன் ஆகியோர் புத்தகங்களை கையில் தடுத்தார்கள்.
அதில் ஒரு பெரிய புத்தகம் குமரி ஆனந்தன் கையில் பலமாக விழுந்தது. அப்போது திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிச்சாமி மேடையில் ஏறி ஜெயலலிதாவை தாக்கினார். பின்னால் இருந்த அமைச்சர்கள் அவரை மேஜையில் இருந்து இறக்கும்போது ஜெயலலிதாவின் தலை முடியை பிடித்து இழுத்தார்.
கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஐ.பெரியசாமி தாவி தாவி ஜெயலலிதாவை நோக்கி செல்ல முயற்சி செய்தார். அவரை பின்னால் இருந்த அமைச்சர்கள் பிடித்து இழுத்தனர். கோ.சி. மணி பட்ஜெட் புத்தகத்தை எடுத்து ஜெயலலிதாவின் தலையில் அடித்தார். பேரவை தலைவர் அவையை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய மணியை எடுத்து ஜெயலலிதா தலையில் போட முயற்சி செய்தபோது, கே.கே.எஸ்.எஸ்.ஆரும் திருநாவுக்கரசரும் அதை தடுத்து விட்டனர். இதனையடுத்து, சட்டப்பேரவை நாற்காலியை எடுத்து ஜெயலலிதா மீது தாக்க முற்பட்டபோது அதையும் தடுத்து விட்டனர்.
சேலம் வீரபாண்டி ஆறுமுகம் ஜெயலலிதாவை தாக்க முற்பட்டபோது, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மைக்கை எடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் அடித்தார். அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், துரைமுருகன் ஜெயலலிதாவை தாக்க முயற்சி செய்தபோது, தம்பி தம்பி வேண்டாம் என்று ஜி.கே.மூப்பனார் தடுத்தார்.
திருநாவுக்கரசரும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் ஜெயலலிதாவிடம் போய்விடலாம் எனக் கூறினார்கள். அதற்கு ஜெயலலிதா மறுத்துவிட்டு அங்கேயே அமர்ந்து விட்டார். பின்னர் முதலமைச்சர் கருணாநிதியும், அவை முன்னவர் துரைமுருகனும் சபாநாயகருக்கு அவையை ஒத்திவைக்க கோரி சிக்னல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சபாநாயகர் தமிழ் குடிமகன் இத்துடன் சபை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ஆளுநரை சந்தித்த பின்னர் போயஸ் கார்டனில் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்தித்து நடந்தவற்றை கூறினார்.
இந்த விவகாரம் 35 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தின் மூலம் வெளியே வந்துள்ளது. நிர்மலா சீதாராமன் கூறிய நிகழ்வு உண்மைதான். தற்பொழுது முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்தின்போது இருந்தார். முதலமைச்சருக்கு பின் இருக்கையில்தான் அவருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
துரைமுருகன் ஜெயலலிதாவை தாக்க முயற்சி செய்யும் போது விருதுநகர் சீனிவாசனை அனுப்பி அவரை பின்னால் இழுக்கச் சொன்னார். இது ஒன்று அப்போது மு.க.ஸ்டாலின் செய்த நல்லது. இது நடந்தது உண்மை. முதலமைச்சர் முற்றிலுமாக மறுத்தால், அதை அவரது மனசாட்சிக்கே விட்டு விடலாம்.
முதலமைச்சராக இருந்த கருணாநிதியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடக்கூடாது என முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தால் உளவுத்துறையின் மூலம் ஆளுங்கட்சிக்கு தெரிந்திருக்கும். அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுங்கள் எனக் கூறிவிட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கலாம். அவர்கள் கூறியது போல முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தால் அதற்கு ஆளுங்கட்சியான திமுகவும் பலியாகிவிட்டது என்பதைதான் புரிந்து கொள்ள முடியும். இன்று இருக்கின்ற திருநாவுக்கரசர், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோருக்கு அன்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் தெரியும்.
இந்த நிகழ்வு நடந்த பொழுது திருநாவுக்கரசர் பேசிய விஷயங்கள் இன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அரசியல் நிலைப்பாடு மாற்றம் காரணமாக அவரவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எதிர்பாராதவிதமாக அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்தான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜெயலலிதா தலைவிரி கோலமாக வெளியே வந்த புகைப்படம் மட்டுமே இன்றளவும் உள்ளது. புகைப்படங்கள் இல்லாததால் சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு பொய் என்று கூற ஏதுவாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து அவை குறிப்பிலும் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மிகவும் சாமர்த்தியமிக்க தலைவராக கருணாநிதி இருந்ததால் இதை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்" என்று மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா கூறினார்.
இதையும் படிங்க: "ஜெயலலிதா தான் எனக்கு நன்றிக் கடன்பட்டவர்.. நானில்லை.." - திருநாவுக்கரசர் எம்.பி.!