மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள், டீசர்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது.
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் தனுஷின் ரசிகர்கள், சமூகவலைதளத்தில், 'கர்ணன்' முதல் காட்சி, 'கர்ணன்' விமர்சனம் உள்ளிட்டை ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கினர். கர்ணன் படத்தைப் பார்த்த இணையவாசிகள், பிரபலங்கள், அரசு உயர் அலுவலர்கள் என பலர் படத்தை வெகுவாகப் பாராட்டி தங்களது கருத்தைப் பகிர்ந்துவருகின்றனர்.
இந்த படத்தை பார்த்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை,வலியை,எதிர்வினையைப் பேசும் வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும்,குறியீடுகளும் நிறைய உள்ளன. அந்த உச்சந்தலை முத்தம் சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை, எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்" என பதிவிட்டுள்ளார்.