பெருநகர சென்னை மாநகராட்சிக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் முழு ஊரடங்கையொட்டி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபெறும் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஊரடங்கைப் பொறுத்தவரை மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ( ஜூன் 20) மட்டும் ஊரடங்கை மீறியதாக 4 ஆயிரத்து 424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 71 மூன்று சக்கர வாகனங்கள், 209 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.
மொத்தம் 2 ஆயிரத்து 791 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 133 வழக்குகள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தவர்கள், முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் ஆகியோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ஆகும். இன்று ( ஜூன் 21) முழு ஊரடங்கு எந்தத் தளர்வுகளும் இல்லாமல் கடைப்பிடிக்கப்படும். ஜிப்மர் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனுமதி உண்டு. மாணவர்கள் ஹால்டிக்கெட்டைக் காண்பித்தால் போதும்” என்றார்.