மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பூந்தமல்லியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கு சேலைகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கீழடி பகுதியில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கிய 5ஆவது நாளே ஏழுவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 10 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், ஆதிச்சநல்லூர் பகுதியில் மத்திய அரசு உலகத்தரத்திலான அகழ் வைப்பகம் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோன்று மகாபலிபுரம் பகுதியில் பாரம்பரிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு வந்திருந்த மத்திய பண்பாட்டு அமைச்சரிடம் கோரிக்கைவைத்துள்ளோம் எனக் கூறினார்.
மேலும், எழுவர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு மேல் தமிழ்நாடு அரசால் ஏதும் செய்ய முடியாது என்றார்.
இதையும் படிங்க: நாளை நடக்கவிருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து!