சென்னை: என்ஐடி, ஐஐஐடி, சிஎஃப்ஐடி மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக ஜேஇஇ ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை (Main) மற்றும் முதன்மை (advanced) தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், நாட்டில் உள்ள என்ஐடி மற்றும் ஐஐஐடி போன்ற மத்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேரலாம். அதேநேரம் இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 2.5 லட்சம் இடத்தை பெறுபவர்கள், ஐஐடியால் நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெற்று, ஐஐடியில் சேருவதற்கான வாய்ப்பை பெறுவர்.
இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் முதலாவதாக ஜனவரி 24, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஜேஇஇ முதல்நிலை தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று (ஜன.24) ஜேஇஇ முதல்நிலை தேர்வை நாடு முழுவதும் உள்ள 290 தேர்வு மையங்களில் சுமார் 8.6 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை!