சென்னை: அடையாறில் இன்று (ஜூன்06) முத்தமிழ்ப் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில், இயல் செல்வம் விருதினை த.செ.ஞானவேல், இசை செல்வம் விருதினை ராஜ்குமார் பாரதி, ராஜ ரத்னா விருதினை பத்மஸ்ரீ ஷேக் மெஹபூப் சுபானி மற்றும் பத்மஸ்ரீ திருமதி காலீஷாபி மெஹபூப் ஆகியோருக்கும், நாட்டிய செல்வம் விருதினை பத்மபூஷண் வி.பி. தனஞ்சயன் மற்றும் பத்மபூஷண் திருமதி சாந்தா தனஞ்செயன் ஆகியோருக்கும், நாதஸ்வர செல்வம் விருதினை நாகேஷ் ஏ.பப்பநாடு, தவில் செல்வம் விருதினை திபா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் ஜி.ராமானுஜம், செயலாளர் பி.அமிர்தம், மிருதங்க செல்வம் திருவாரூர் டாக்டர் பக்தவச்சலம் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஞானவேல், பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், பல்வேறு புத்தகங்களை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர், கடந்த பத்து ஆண்டுகளாக திரைத்துறையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் பணியாற்றியிருக்கக்கூடியவர்.
அந்த வரிசையில் அவரது "ஜெய்பீம்" படம் பலரது மனச்சாட்சியை உலுக்கியது. என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா "ஜெய்பீம்" திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். "ஜெய்பீம்" படத்தை போய்ப் பார்த்தேன். அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டு, மூன்று நாள்களுக்கு நான் தூங்கவேயில்லை.
சிறைச்சாலைச் சித்ரவதையை நீங்கள் அந்த சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அதை உண்மையில் அனுபவித்தவன் ஓராண்டு காலம். அதனால், மற்றவர்களைவிட என்னை அந்தப் படம் கூடுதலாகப் பாதித்தது. இளம் வயதில், மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கக்கூடிய ஞானவேலை உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க:வெளிச்சத்திற்கு வராத பல ஜெய்பீம் கதைகள்; போலீசாரின் சித்ரவதைக்குத் தொடர்ந்து ஆளாகும் வேதனை நிறைந்த ஆதிப்பழங்குடியின சமூகம்!