சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பரப்புரை ஒருபுறம் இருந்தாலும், மக்கள் கவனத்தை ஈர்க்க கட்சிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அதிமுக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்கும் நிகழ்வை நாளை நடத்தவுள்ளது.
50.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவு மண்டபம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவுச் சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி, நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஜெயலலிதா நினைவிட திறப்பு அரசியலில் நடைபெறும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சசிகலா விடுதலையன்று மக்கள் கவனம் அவர் பக்கம் திரும்பிவிடக்கூடாது என்று அதே நாளில் நினைவிடத் திறப்பு விழாவை நடத்த அதிமுக திட்டமிட்டு செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல், டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நிகழ்வில் கலந்துகொள்ள அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் யாரும் நிகழ்வில் பங்கேற்கவில்லை. தேர்தல் சமயத்தில் ஏதேனும் ஒரு தேசியத் தலைவர் வருவார் என அதிமுகவினர் எதிர்பார்த்த நிலையில், மோடி, அமித்ஷா பங்கேற்காதது அதிமுகவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்' - திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்