சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் உள்ள சசிகலாவைச் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன், "ஆறுமுகசாமி ஆணையத்தின் கருத்து ஆச்சரியமாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அலுவலர்கள் மீதே ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் இறப்பு தேதி குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆணையம் கூறுவதுபோல சாட்சியம் அளித்த யாரும் குற்றம் சாட்டியதாக தெரியவில்லை.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகளை எழுப்பியதே திமுகதான். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான். ஜெயலலிதாவை மருத்துவமனையில் இருந்தபோதுதான் நான் பார்த்தேன். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் எதிர்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் சிலரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆறுமுகசாமி விசாரணை ஆணைய பரிந்துரையின் படி மேல் நடவடிக்கை - தமிழக அரசு உத்தரவு