சென்னை: சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்தது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (மார்ச்.23) ஆன்லைன் ரத்து தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில், மசோதா தொடர்பாக விவாதம் செய்த போது அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கருத்து கூறினார்.
இதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மசோதா தொடர்பாக விவாதம் செய்ய அனுமதி கேட்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கியிருந்தார். ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "என்னுடைய தலைமையிலான அணிதான் அதிமுக. ஏற்கனவே அதிமுக சார்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார். பின்னர், ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்தற்கு விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, "முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலேயே ஓபிஎஸ்க்கு அனுமதி அளித்தேன்" எனத் தெரிவித்தார். இதற்கு ஓபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் மற்றும் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மனோஜ் பாண்டியனை ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றும் போது ஒரு கட்சிக்கு ஒரு வாய்ப்புதான் என்பது சட்டப்பேரவை மரபு, மாண்பு ஆகும். சட்டமன்றத்தில் மரபு, மாண்புகளை காற்றில் பறக்கவிட்ட நிகழ்வு என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். பெரும்பான்மை அடிப்படையில்தான் சட்டப்பேரவை சபாநாயகரின் முடிவு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் ஜி20 அமைப்பின் நிதி கட்டமைப்பு மாநாடு - இன்றும், நாளையும் நடக்கிறது!
அதிமுகவில் 62 எம்.எல்.ஏக்கள் இருக்கின்ற நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். இதுதொடர்பாக, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் நேற்று நடந்த ஆன்லைன் ரத்து மசோதாவிற்கு ஓபிஎஸ் பேச வாய்ப்பு அளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், முதலில் ஓபிஎஸ் பேசியதற்கு அமைதியாக இருந்தார். ஆனால், மசோதா தொடர்பாக ஓபிஎஸ் பேசி நிறைவு செய்யும் போது அ.இ.அ.தி.மு.க சார்பாக என்று பேசியதை ஏற்க முடியாது. சட்டமன்றத்தில் ஓபிஎஸ்ஸை நீக்கக்கோரி, கடிதம் கொடுத்த நிலையில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்தால், ஒரு கட்சியில் நான்கு, ஐந்து முதலமைச்சர்கள் இருந்தால் அனைவரையும் பேச அனுமதி அளிப்பீர்களா? இது அதிமுகவின் உரிமை. திமுக போல் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு இடங்களில் மோடி உருவபொம்மையினை எரித்து ஆர்ப்பாட்டம்!