தமிழ்நாட்டில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி கொண்டிருந்த ஜப்பானியா்கள் நேற்று இரவு (ஏப்.12) சென்னையிலிருந்து சிறப்பு விமானத்தில் ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனா்.
ஏற்கனவே சென்ற வாரம் 208 ஜப்பானியா்கள் தனி சிறப்பு விமானத்தில் ஜப்பான் புறப்பட்டு சென்றனா். இதனையடுத்து இரண்டாவது தனி சிறப்பு விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. அதில் 6 குழந்தைகள் உள்ளிட்ட 232 ஜப்பானியா்கள் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் அனைவருக்கும் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. விமானத்தில் பயணிகளை சேர்ந்து அமர வைக்காமல் இருக்கைகளிடையே இடைவெளிவிட்டே அமர வைத்தனர். விமானத்தின் உள்பகுதி, வெளி பகுதிகள், விமான நிலையத்தில் பயணிகள் சோதனை நடக்கும் பகுதிகள் அனைத்திலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.
ஜப்பானியா்களின் அடுத்த சிறப்பு தனி விமானம் நாளை (ஏப்.14) இரவு 215 பயணிகளுடன் ஜப்பான் செல்கிறது.
அதைப்போல் தமிழ்நாட்டில் வசித்த அமெரிக்கர்களுக்கான சிறப்பு தனி விமானம் நேற்று(ஏப்.12) மாலை சென்னையிலிருந்து மும்பை வழியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 7 குழந்தைகள் உட்பட 96 அமெரிக்கர்கள் சென்றனர்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து சிங்கபூருக்கு இயக்கப்பட்ட விமானம்!