தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிரமாகத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் இன்று (ஜன.7) ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மாலை 3 மணியளவில் காணொலி மூலமாக இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலத்திற்கு இரண்டாம் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலத்திற்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் இன்று (ஜன.7) முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவையும், மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்குப் பெட்டக ரயில் போக்குவரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.7) காணொலி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் செங்குன்றம், திருவாய்க்கண்டிகை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஜன.7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
