இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன.6) முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி (43) கடந்த இரண்டாம் தேதி நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்தக் குழாயினை விரிவுபடுத்துவற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, இன்று (ஜன.6) அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர், இன்று (ஜன.6) ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
ஜனவரி 29ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை முதல் அமர்வாகவும், மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக காணொலி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜன.6) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (ஜன.6) முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெறுகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, காரைக்கால் பிரிவில் மூன்றாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு முடிந்த நிலையில், மீதமுள்ள நிரப்பப்படாத 19 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜனவரி 7 முதல் 15ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜன.6) கடைசித் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.