ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டங்களில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மாலை நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பொறுப்பாளர்களை அரசு அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம்