சென்னை: போயஸ் தோட்டம் வேதா இல்லம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை செய்ய வந்த பூசாரி ஹரிஹரனை, ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் உள்ளிட்டவரகள் இணைந்து தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சசிகலா தூண்டுதலின் பெயரில் தான், தன் மீது பூசாரி ஹரிஹரன் பொய் புகார் அளித்து இருப்பதாக கூறி ஜெ. தீபா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கி உள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, "சுதந்திர தினத்தன்று (ஆக்.15) வேதா இல்லத்தில் தனது கட்சி தொண்டர்களுடன் இணைந்து கொடி ஏற்றி கொண்டாட திட்டமிட்டதாகவும், அப்போது சகோதரர் தீபக் வீட்டில் கொடியேற்ற விடாமல் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ. தீபா மீது கோயில் பூசாரி புகார்..! என்ன நடந்தது?
அந்த சமயத்தில் வேதா இல்லத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை செய்வதற்காக பூசாரி ஹரிஹரன் என்பவர் அத்துமீறி நுழைந்ததாகவும், அதற்கு தான் அனுமதி இல்லாமல் பூஜை செய்யக் கூடாது என ஹரிஹரனை கேட்டதற்கு, அவர் தன்னை ஒருமையில் பேசி, 20 வருடங்களாக இங்கு தான் பூஜை செய்கிறேன். நீங்கள் யார்? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், சசிகலா தான் தன்னை நியமித்து இருப்பதாக ஹரிஹரன் கூறி, கோயிலில் இருந்த வெள்ளி கலசத்தை எடுத்துச் சென்று விட்டதாக தீபா தெரிவித்தார். பின்னர் இதனை மாற்றி தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரிஹரன் தன் மீது பொய் புகார் அளித்துள்ளார் என ஜெ. தீபா கூறினார்.
இவை அனைத்தும், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் தான் நடந்ததாகவும், தன் மீதும், தனது கணவர் மீதும் பொய் புகார் அளித்திருப்பதாகவும் தீபா குறிப்பிட்டார். தங்களுக்கு சொந்தமான கட்டடம் என சாதாரணமாக ஹரிஹரனிடம் கேட்ட கேள்விகளை தகாத வார்த்தைகள் என பொய்யாக கூறியதாகவும், மேலும் தங்களுக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் பராமரிப்பு வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்.
தங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் சசிகலா மற்றும் அவரது ஆட்களால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து இருப்பதாக தீபா கூறினார். மேலும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிரதான காரணம் என்று கருதப்படும் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை வேதா இல்லத்திலோ அல்லது மற்ற பூர்வீக இடத்திலோ உரிமை கொண்டாட அனுமதிக்க முடியாது" என ஜெ. தீபா தெரிவித்தார்.