சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது, மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் வேதா இல்லத்தின் சாவியை சென்னை மாவட்ட ஆட்சியர் தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, இருவரும் வேதா இல்லத்திற்கு வருகை தந்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டினுள் சென்றனர். வீட்டிற்குள் அனைத்து அறைகளையும் இருவரும் 3 மணி நேரமாகப் பார்வையிட்டனர்.
'ஜெயலலிதா பயன்படுத்திய பல பொருட்கள் இல்லை':
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, "ஜெயலலிதா மறைந்த பின்னர் இன்று தான் இங்கு வந்துள்ளேன்.
ஜெயலலிதா இறந்த அன்று வீட்டிற்குள் என்னால் செல்ல முடியவில்லை. வாசலில் தான் நின்றேன். முன்பைவிட வேதா நிலையம் தற்போது மிகவும் மாறியுள்ளது.
ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களில் நிறையப் பொருட்கள் இல்லை. ஜெயலலிதா வாழ்ந்த அடையாளங்கள் வீட்டிற்குள் எதுவும் இல்லை. அவர் பயன்படுத்திய கட்டில் தற்போது இல்லை. ஜெயலலிதா பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளது. ஆனால், இந்த வீட்டை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை.
அதிமுகவை சட்டரீதியாக எதிர்கொள்ளத்தயார்:
இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று தான் என்னுடைய ஆசை. அதிமுக சார்பில் வேதா நிலையம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார்.
'சசிகலா மீது சந்தேகம் உள்ளது':
இந்த வீட்டை அரசுடைமையாக்கினால் அரசுக்கு எந்தப் பயனும் இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது.
அவரையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவிடம் நெருங்க விடாமல் எங்களைத் தடுத்தவர் சசிகலா. இந்தச் சொத்து விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் இருந்து எந்தத் தொந்தரவும் வரவில்லை. வேதா இல்லத்திற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்