சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வரும் கருத்துக்கணிப்புகளையும் பார்த்து பயந்துபோகியுள்ளார். எனவே, தினமும் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
சமீபத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம், திமுக தொடர்ந்த நீதிமன்ற வழக்குக் காரணமாக தான், அவர் மன அழுத்தம் ஏற்பட்டு இறந்ததாகப் பொய் கூறியுள்ளார். டான்சி வழக்கு முதல் சொத்துகுவிப்பு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை அனைத்தையும் திமுக சட்டரீதியாக நடத்தியது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்தபோதும், அதை திமுக அரசியல் ரீதியாக அணுகவில்லை.
ஆனால், பாமக தலைவர் ஜி.கே. மணி மற்றும் வழக்கறிஞர் பாலு அவர்கள் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை நேரில் சென்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்ந்து, அரசியல் ரீதியாக கர்நாடக மாநில முதலமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுத்தது பாமக தான்.14.5.2015அன்று வெளியான தினகரன் மற்றும் இந்து ஆங்கில பத்திரிகை செய்திகளைப் படித்தேன்.
அதுமட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்த பாமக-வினரை இன்று அதிமுக தனது கூட்டணியில் வைத்துள்ளது. மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தினை எதிர்த்து பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது’’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இதையும் படிங்க: 63 ஆண்டுகளாக கமல் மக்களோடுதான் இருக்கிறார்' - ஸ்ரீபிரியா