சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்வி குழுமங்கள், மருத்துவமனைகள், கார்ப்ரேட் அலுவலகங்கள் உள்ளிட்ட சுமார் 90 இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
மேலும், இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கட்டுக்கட்டாக பணங்களும் சிக்கின. அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகன், அவரது மகள் ஸ்ரீநிஷா, மருமகன் நாராயணசாமி இளமாறன், மற்றும் கல்வி குழும நிர்வாகி உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட கட்டு கட்டான பணங்கள், வெளிநாட்டு கைக்கடிகாரம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அட்டை பெட்டியில் அடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளையில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வரும் சனிக்கிழமை அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.
சோதனைகள் முடிக்கப்பட்ட நிலையில், 4 நாட்கள் கழித்து சனிக்கிழமை அன்று ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஐந்து நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சுமார் ரூ.1,050 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
லட்சுமி அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி குழுமத்திலிருந்து வரக்கூடிய கட்டணங்களை வரிவிலக்கு என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் அணுகி வரிவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகும் பல்வேறு பெயர்களில் அறக்கட்டளை பதிவு செய்த போதும் அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காத நிலையில், கடந்த ஏழு வருடங்களாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய கல்வி குழுமங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் நான்கரை கோடி ரூபாய் பணம் மற்றும் 16 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டன. அதே போல சவிதா கல்வி குழுமம் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
அங்கு 27 கோடி பணம் 18 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் சவீதா குழுமத்தின் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பி நேரில் விசாரணைக்கு அழைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்.. நாளை விசாரணை!