சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சுமார் 90 இடங்களில் நடைபெற்று வந்த இந்த சோதனை சில இடங்களில் முடிவடைந்துள்ள நிலையில், முக்கிய இடங்களில் ஐந்தாவது நாளாக இன்று (அக்.9) வருமானவரித்துறை சோதனை நீடித்து வருகிறது.
இந்த சோதனையில் ஏற்கனவே, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து சுமார் 4 கோடி ரூபாயும், சவிதா மருத்துவ கல்வி குழுமம் தொடர்புடைய இடத்தில் இருந்து 12 கோடி ரூபாயும் கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகனின் மகளுக்கு சொந்தமான ஈக்காட்டுத்தாங்கல் கெஸ்ட் ஹவுஸில் இருந்து வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 7 வெளிநாட்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த 7 கைக்கடிகாரங்களின் விலை சுமார் ரூ.2.45 கோடி எனவும் கூறப்படுகிறது.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் ஜெகத்ரட்சகனின் மகளின் கெஸ்ட் ஹவுஸில் இருந்து கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றபட்டுள்ளதால் அது குறித்தும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாட்டு கைகடிகரங்களுக்கு முறையான ஆவணங்கள், ரசீதுக்கள் இருக்கின்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஜெகத்ரட்சகனின் மகள் மற்றும் மருமகன் நடத்தி வரும் சுமார் 12 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை கொண்டு ஜெகத்ரட்சகன் மருமகன் நாராயணசாமி இளமாறனை அடையாறு இல்லத்திற்கு வரவைக்கப்பட்டு நேற்று இரவு முதல் வருமான வரி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடித்து வரும் நிலையில் இன்று மாலைக்குள் சோதனை நிறைவு அடையும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெகத்ரட்சகன் மருமகனிடம் விசாரணை.. வருமான வரித்துறையின் 5வது நாள் கெடுபிடி..