சென்னை: சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (நவ.16) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சி மற்றும் பெங்களூரில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக, சென்னையில் தற்போது சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மணல் குவாரி, ரியல் எஸ்டேட் அதிபர்கள், குத்தகைதாரர்கள், அமைச்சர்கள், சில முக்கிய புள்ளிகள் என வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை அதிரடியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கேகே நகரில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நீலகண்டன் வீடு உள்ளது. இங்கு இன்று (நவ.16) காலை முதல் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் ரத்தினம் தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வினோத்குமார் என்பவர் வீட்டிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவையெல்லாம் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளருக்கு தொடர்புடைய இடங்கள் என கூறப்படுகிறது.
அதேபோல் சென்னை வேப்பேரி, பட்டாளம், மண்ணடி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஏற்கனவே தொழிலதிபர்கள் மற்றும் தொழில் சார்ந்த வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனையானது, அரசியல் பின்புலம் கொண்ட சோதனை இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு..! போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!