சென்னை: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 68ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சின்மயா நகரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்த அனுமதி கோரி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற உத்தரவின் படி கோயம்பேடு காவல்துறையினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தையோ அதன் தலைவர்களையோ புகழ்ந்து பேசக்கூடாது, நிகழ்ச்சி அனைத்தையும் வீடியோ பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தலாம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
காவல்துறையின் இந்த நிபந்தனைகளை எதிர்த்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தங்கராசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உய ர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன், பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அதன் தலைவரையோ புகழ்ந்து பேசக் கூடாது என நிபந்தனை விதிக்க முடியாது. ஆகவே காவல்துறையின் நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது. பேச்சு போட்டியின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, அண்டை நாடுகளின் இறையாண்மைக்கு விரோதமாகவோ பேசக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அரசு ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவு