சென்னை: சென்னையில் இன்று காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீடு மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்கள் என பல்வேறு பகுதிகளில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் சென்னை சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழிலதிபர் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: லியோ படம் வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை!
அதேபோல் மாதாவரம் நடராஜ் நகர் தனியார் குடோன் ஒன்றிலும், தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி, வட சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சோதனைக்கும், அரசியல் பொறுப்பில் இருக்கக் கூடிய நபருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து அடுத்த கட்ட தகவல் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை எதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது, எந்தெந்த நிறுவனங்களில் நடத்தப்படுகிறது, எத்தனை இடங்களில் நடத்தப்படுகிறது என்பது குறித்த தகவலும் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.