தமிழ்நாடு அரசு எண்ணூர் துறைமுகம் மற்றும் மகாபலிபுரத்தை இணைக்கும் சுற்றுவட்டச் சாலையினை ரூ.6175 கோடி செலவில் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிமுறை ஒப்புதல் அளித்திருந்தது. தெற்கு மாவட்டங்களிலிருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு பெட்டக வாகனங்கள் செல்வதற்கு உதவியாக இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலையின் மொத்த நீளம் 133 கி.மீ. ஆகும். இதில் 97 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. 35 கி.மீ. தூரத்திற்கு ஏற்கெனவே இருக்கும் சாலை பலப்படுத்தப்படவுள்ளது. இந்த சுற்றுவட்டச் சாலை எண்ணூர் துறைமுகத்தில் ஆரம்பித்து மகாபலிபுரத்தில் முடிகிறது.
காட்டுப்பள்ளி, புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சிங்கம்பெருமாள் கோவில் வழியே மகாபலிபுரம் வரை செல்லும் இந்த புதிய சாலையில் 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. 81 கிராமங்கள் வழியே பயணிக்கும் இந்த சாலையானது 77 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதி வழியாகவும் பயணிக்கவுள்ளது.
இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தின் கொண்டமங்கலம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 25 ஏக்கர் வனப்பகுதி பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள இடங்களில் இருக்கும் 4797 மரங்களில், 2168 மரங்கள் பாதிக்காதபடியும், 2629 மரங்கள் வேரோடு இடமாற்றம் செய்யப்படும் எனவும் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கடந்தாண்டு இத்திட்டத்தை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் இப்போது மத்திய சுற்றுச்சூழல் துறை கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியை சில நிபந்தனைகளுடன் வழங்கியுள்ளது. அதில் முக்கியமான நிபந்தனைகள்,
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும்.
- புதிதாக அமைக்கப்படும் சாலை குளங்கள், ஏரிகளை பாதிக்கக் கூடாது.
- கடற்கரை ஒழுங்காற்று மண்டல பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது.
- சாலை அமைக்கப்படவுள்ள கடலோர பகுதிகளுக்கு அருகில் மாங்குரோவ் மரங்கள் நட வேண்டும்.
- சாலையை ஒட்டி பனைமரங்கள் நட வேண்டும்.
- மீனவ மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது.