கடந்த 2020 ஜுன் மாதம் கல்வான் எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர்.
இவருக்கு ஒன்றிய அரசு சார்பில் வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி சுப்ரமணியன், பழனி குடும்பத்திற்கு வீட்டு மனை வழங்க முடிவு செய்தார்.
அதன் படி சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இறந்த ராணுவ வீரரின் மனைவி வானதியிடம் வீட்டு மனைக்கான பத்திரத்தை வழங்கினர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி ஸ்டேடியத்தில், மறைந்த ராணுவ வீரர் பழனிக்கு, சிலை வைக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இறந்த ராணுவ வீரருக்கு சிலை வைக்கும்வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.
இதனைத்தொடர்ந்து மறைந்த ராணுவ வீரரின் மனைவி வானதி பேசுகையில், என் மகனும் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறான். அவனையும் நிச்சயம் ராணுவத்திற்கு அனுப்புவேன். இந்திய ராணுவத்திற்கு நிறைய வீரர்களை தங்கள் குடும்பத்தில் இருந்து மக்கள் அனுப்ப வேண்டும். ராணுவத்தில் சேர்வது குறித்து விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: கல்வான் தாக்குதல்: சீன வீரர்கள் மரணம் குறித்து கேள்வியெழுப்பிய ப்ளாகர் கைது!