கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே மத்திய அரசு வருகின்ற ஜூன் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறந்துகொள்ள அனுமதி வழங்கியிருந்தது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மத வழிப்பாட்டுத் தலங்களைத் திறப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்களுடனும் தலைமைச் செயலர் சண்முகம் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கும்போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈஸ்வரனந்தா சரஸ்வதி (சித்தானந்தா ஆசிரமம்), "தமிழ்நாடு அரசிடம் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரிக்கை வைத்தோம். மன நிம்மதியில்லாமல் இருக்கும் மக்கள் அமைதி பெற, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். வழிபாட்டுத் தலங்களில் 100 டோக்கன் வழங்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்கள் வழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினோம். பக்தர்கள் கண்டிப்பாக கிருமிநாசினி கொண்டு கை, கால் கழுவிய பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், "தற்சமயம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிவாசல்களை அடுத்த மாதம் திறக்க வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக இஸ்லாம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 50 விழுக்காடு நபர்கள் பள்ளிவாசல் திறக்கவும், 50 விழுக்காடு நபர்கள் திறக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதன் தொடர்ச்சியாக ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா வைரஸ் தொற்று முழுவதும் குறைந்த பின்னர் பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும், அனைவரும் ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் இன்று ஆயிரத்தை தொட்ட கரோனா!