சென்னை: தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 மக்களவைத் தொகுதிகளும், 61 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
இதனுடன் அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுடன் 'கொங்கு நாடு' என்ற பகுதியைப் பிரித்து, புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்.
மக்கள் விருப்பம்
அந்தவகையில் இதுகுறித்து பாஜக மாநிலச் செயலாளர் கரு.நகராஜன் கூறியதாவது, 'இன்று (ஜூலை 11) மத்திய அமைச்சரவையில் 2 பேர் இணை அமைச்சர்களாக பொறுப்பெற்றுள்ளார்கள். எந்த நாடு ஏற்பட வேண்டும் என்றாலும் அது மக்கள் விருப்பம் தான். அதற்கு உதாரணம் தெலங்கானா, இது குறித்து ராமதாஸ் கூட பேசி இருக்கிறார். ஒன்றிய அரசு என்று சொல்வது அவரவர் விருப்பம். கொங்கு நாடு என்று சொல்வது அந்த மக்களுடைய விருப்பம்' என்றார்.
டிடிவி தினகரன் கருத்து
கொங்கு நாடு விவகாரம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்க வேண்டியது அவசியம்.
எந்த தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாதபோது சுய லாபத்திற்காக தமிழர்களை சாதி ரீதியாகக் கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.
ஏற்கெனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்று வரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டை கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.
எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது’ - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!