சென்னை: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனமும் ஒரு கிருமி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த கருத்துக்கு பாஜக மற்றும் சங் பரிவார அமைப்பு என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பர்மஹன்ஸ் ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்தார்.
மேலும், “திமுக சார்பாக சனாதன தர்மத்தை அழிப்போம் என நீங்கள் தேர்தல் அறிக்கை விடுங்கள், பாஜக சார்பாக சனாதனத்தை வளர்ப்போம் என தேர்தல் அறிக்கை நாங்கள் அளிக்கிறோம். அப்போது பார்க்கலாமா யாருக்கு ஓட்டுகள் விழுகிறது” என சாவல் விடுவது போன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சனாதன தர்ம விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட கருத்து என்னவென்று தெரியாமலேயே பிரதமர் மோடி பதில் கருத்து வெளியிட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர், சனாதன விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மக்களை திசை திருப்பி, சனாதன போர்வை போற்றிக்கொண்டு குளிர்காய பார்க்கிறார். மணிப்பூர் விவகாரம் பற்றியோ, சிஏஜி அறிக்கை பற்றியோ ஏன் பிரதமர் வாய் திறக்கவில்லை எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது, "இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத்தான் ராஜ தந்திர அரசியல்வாதியாக மாறி வருகிறார் என்று தெரிகிறது. அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எந்தெந்த வகையில் எல்லாம் விமர்சனங்கள் வந்து இருக்கிறது என்பதை ஆராய்ந்து தெளிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், கட்டாயமாக சனாதன விவகாரத்தை எதிர் வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை இந்தி, சமஸ்கிருதம் போன்றவைகளை எல்லாத் தேர்தல் காலத்திலும் அவர்கள் தேர்தல் பரப்புரையில் இந்த யுக்தியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில், அனைவரும் ஒரே அணியில்தான் இருக்கிறார்கள். இந்த சனாதன விவகாரம் இந்திய கூட்டணிக்கு ஒரு பொருட்டு அல்ல” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலை விபத்துகளை விசாரணை செய்ய போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை ஐஐடி பயிற்சி!