சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது. அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்திலேயே இதுவரை 'புஷ்பா' தான் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்.
சுகுமார் இயக்கத்தில் வெளியான 'ரங்கஸ்தலம்' திரைப்படம் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெற்றியை குவித்தன. அந்த வரிசையில் சுகுமார் இயக்கியுள்ள 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், 'புஷ்பா' திரைப்படம் குறித்து, இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பு சார்பில், நேற்று (ஜன.6) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், "சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட அந்த காட்சியை உடனடியாக நீக்கி, திரைப்பட இயக்குநர் சுகுமார், தயாரிப்பாளர், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புஷ்பா படத்தை சரியாக ஆய்வு செய்யாமல் தணிக்கை சான்றளித்த தமிழ்நாடு தணிக்கை திரைப்பட குழு உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Valimai Flim postponed: வலிமை திரைப்படம் தள்ளிவைப்பு