சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மாஸ் ஹீரோ உருவாகிறார் அல்லது உருவாக்கப்படுகிறார். அந்த காலத்தில் இருந்தே இது வழக்கமான ஒன்றுதான். எம்ஜிஆரில் தொடங்கி இந்த ஹீரோ வழிபாடு மட்டும் இப்போது வரை மாறாமல் இருக்கிறது. தொடர் வெற்றிகள், தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் படங்களை கொடுப்பது, ரசிகர்கள் கூட்டம் என எல்லாம் அமையும் ஒரு நடிகரைத்தான் தமிழ் சினிமா தூக்கி கொண்டாடுகிறது.
அப்படி நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு கொண்டாடப்படுபவர், நடிகர் விஜய். தனது அப்பா மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் என்றாலும் அதன் பிறகு தனது கடின உழைப்பால் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்து ஒவ்வொரு குடும்பங்களிலும் இடம்பிடித்தார். விஜய் ஒரு ஜெயிக்கிற குதிரை, இவர் மீது பந்தயம் கட்டினால் வெற்றி நிச்சயம் என்று தயாரிப்பாளர்கள் இவரைத் தேடி வருகின்றனர்.
ரஜினிக்கு பிறகு ஏன் சில சமயங்களில் ரஜினியையே முந்தியவர், விஜய். தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை உச்சிக்கு கொண்டு சென்றவர். இப்படி இருக்கும் எந்தவொரு நடிகருக்கும் அரசியல் ஆசை வருவது இயல்பு தான்.
தற்போது தனக்கென ஒரு கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இப்படி தனக்கான ஒரு கூட்டமே இருக்கும்போது வழக்கமாக நடிகர்கள், இந்த ரசிகர் கூட்டத்தை அரசியல் பயணத்திற்குப் பயன்படுத்தி கொள்ளலாம் என நினைப்பது இயல்பான ஒன்று தான்.
நடிகராக இருந்து முதலமைச்சர் ஆன எம்ஜிஆர் வழியில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் எந்த நடிகரையும் இந்த ஆசை விடவில்லை. ரஜினி கடைசி வரை அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி இறுதியில் பின்வாங்கிவிட்டார். ஆனால், விஜய் மெதுவாக காய்களை நகர்த்தி வருகிறார் என்பதனை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகிறது. ஏற்கனவே 2013இல் விஜய் நடித்த ’தலைவா’ படத்தில் இடம் பெற்ற 'Time to lead' என்ற வாசகம் அப்போதைய அதிமுக ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்திலும் அரசியல் சார்ந்த வசனங்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடுதோறும் உள்ள தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த மக்கள் இயக்கத்தை புதுச்சேரி ரசிகர் மன்றத் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளராக இருந்து தற்போது கவனித்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் மக்கள் இயக்கம் பலமாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட மன்றங்களையும் ரசிகர்களையும் ஒருங்கிணைத்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விஜய் அனுமதி அளித்தார். அதில்,அவர்கள் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளையும் பெற்றனர். இது அரசியல் களத்தில் பேசு பொருளானது. இதனால் உள்ளுக்குள் மகிழ்ந்த விஜய், வெற்றி பெற்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட விஜய்யும் மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்த மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள், விஜய் மக்கள் மன்றத்தின் தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அது மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தானம் செய்ய ’’குருதியகம்’’ என்ற செயலியும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் இருந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் ஒன்று சென்றுள்ளது. அதில் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள புஸ்ஸி ஆனந்த், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் 15ஆம் தேதி முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய படிவம் விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த படிவத்தில் அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான ஒப்புதல் மற்றும் ஆலோசனைகள் குறித்து இருப்பதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவமும் வழங்கப்பட உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க விஜய் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த முடிவு அரசியல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற அம்பேத்கரை கையில் எடுத்துள்ளதாகவும் ஒரு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது. விஜய்யின் இந்த திட்டம் எந்த அளவு பலனைத் தரும் என்பது தெரியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த யாரும் தமிழ்நாடு அரசியலில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை என்பது வரலாறு. அத்தகைய வரலாற்றை விஜய் மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: "திமுக கோப்புகள்" - அண்ணாமலை அதிரடி ட்வீட்.. வாட்ச் பில் இடம்பெறுமா..?