சென்னை: இயக்குநர் அஹமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் திரைப்படம் செப். 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியானது சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
வாமனன், என்னென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இறைவன் படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் இறைவன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியானது நேற்று (செப். 24) சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, நரேன், அழகம் பெருமாள், நடிகை விஜயலட்சுமி, இயக்குனர் அஹமது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினரான நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ரசிகர்கள் லவ் யூ என்று கத்திய நிலையில், அன்பை வெளிப்படுத்த தாமதப்படுத்தாமல் உடனே வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறி ரசிகர்களுக்கு லவ் யூ என்றார். தொடர்ந்து, விஜய் சேதுபதி பேச தொடங்கிய நிலையில், ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லை எனவும், ஆடியோ சரியாக இல்லை எனவும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், ஆடியோவை மூக்கில் உறிஞ்சிதான் கேட்க வேண்டியதாக இருக்கிறது எனக்கூறி ஸ்பீக்கரை சரி செய்ய சொன்னார்.
ஆனால், தொடர்ந்து ரசிகர்கள் கூச்சலிட்டதால் "நிகழ்ச்சியை நடத்தவா வேணாமா" எனக் கேட்டார். மேலும், பேசிய அவர், "நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி பெரிய ஹீரோ. நான் நடித்த முதல் படத்திற்கு 250 ரூபாயும், இரண்டாவது படத்திற்கு 400 ரூபாயும் சம்பளம் வாங்கினேன்" என்றார்.
அதனைத்தொடர்ந்து, ஜெயம் ரவியோடு இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஏற்கனவே கதை சொன்னார்கள்.. ஆனால், நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதற்கான காரணத்தை மேடையில் சொல்ல முடியாது. போகனில் நடிக்க அழைத்தார்கள். டேட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நிச்சயம் நடிக்கலாம்" என்று கூறினார்.
மேலும், நிகழ்ச்சியில், நடிகர் ஜெயம் ரவி பேசினார். எந்த ரோலில் நடிக்க விரும்புவீர்கள் என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு, நெகட்டிவ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என பதிலளித்தார். இறைவன் என்ற டைட்டலை படத்திற்கு ஏன் வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு, நூறு பேருக்கு சோறு போட்டு பாருங்கள், கண்ணு தெரியாதவர்களுக்கு சாலை கடக்க உதவி பாருங்கள் இறைவன் தெரிவார். அப்படி பட்ட டைட்டலை ஏன் படத்திற்கு வைக்கக் கூடாது என்றார்.
அதனைத் தொடர்ந்து, நான் பார்த்த முதல் நடிகர் என்று விஜய் சேதுபதி கூறியதை குறிப்பிட்ட நடிகர் ஜெயம் ரவி, நான் இயக்க விரும்பிய முதல் ஹீரோ விஜய் சேதுபதி. ஒரு நடிகருக்கு தேவையான அனைத்தும் இவரிடம் உள்ளது. இவர் நன்றாக நடித்தால் நமக்குதான் நல்ல பெயர் வரும். ஆனால், அதற்கு இவர் கால்ஷீட் கொடுக்கனும். ரொம்ப டேட் எல்லாம் எடுத்துக்க மாட்டேன், சீக்கிரம் முடித்துவிடுவேன். விஜய் சேதுபதி நீங்கள் தொடர்ந்து வெற்றி அடைவீர்கள் என வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
தனி ஒருவன் 2 தொடர்பான கேள்விக்கு, பதுலளித்த அவர், மோகன் ராஜா, அண்ணன் இருக்கும் போது என்ன கவலை எனக்கு, ஜெயம் மட்டும் தான் என்று கூறினார். இறைவன் திரைப்படம் த்ரில்லர் படம் என்பதால் அதற்கு ஏற்றார்போல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் நிகச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: "வீரலட்சுமி கேவலமான அரசியல் செய்கிறார்" - நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு!