சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் (IPL cricket match) தொடரின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தகுதிச்சுற்று 1 (Qualifier 1) போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் (Gujarat Titans) பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் 24ஆம் தேதி நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று (Eliminator) ஆட்டமும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. பொதுவாக சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக, வாலாஜா சாலை முதல் சிவானந்தா சாலை வரை வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானம் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 23, 24ஆம் தேதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
* போட்டி முடிவடைவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயின்ட், கொடி மரச சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம். அண்ணா சிலை அருகே வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்படாது. வெலிங்டன் பாயின்ட் - பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.
* பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
* தொழிலாளர் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மாறாக, கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும். அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல கிடையாது. வெலிங்டன் பாயின்ட் & பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.
* பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மேலும், கண்ணகி சிலை (அல்லது) ரத்னா கஃபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.
* பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் "U" திருப்பம் செய்ய அனுமதியில்லை. அதற்கு பதிலாக, வாகனங்கள் வெலிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படும். அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் சாலை வழியாக, ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்ல அனுமதி அளிக்கப்படும்.
* ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: MI vs SRH: மயங்க் அகர்வால் அதிரடி - மும்பை அணிக்கு 201 ரன்கள் இலக்கு!