சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி பாடகராக வலம் வருபவரும் பிரபல பாடகர் யேசுதாஸின் மகனுமான விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சினிமா பிரபலங்களின் வீட்டில் தொடர்ந்து நடைபெறும் இந்த திருட்டுகள் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முன்னனி இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், 60 சவரன் நகை திருடப்பட்டு வழக்கில் அவர் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என காவல் துறையினரால் குற்றம் நிரூபிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த சூட்டின் தாக்கம் குறையும் முன்பே பிரபல பின்னனி பாடகரான விஜய் யேசுதாஸ் தன் வீட்டிலும் 60 சவரன் நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அபிராமபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரது வீட்டில் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனா, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் பணி செய்த 11 ஊழியர்கள் என அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் யாரும் திருடவில்லை எனத் தெரியவந்துள்ளது. பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை போலீசார் தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் விசாரணைக்கு தற்போது வரை ஆஜராகவில்லை. மேலும், புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் காவல் நிலையத்தில் போலீசாரின் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடு போனதாக கூறப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததும், அவை உடைக்கப்படவில்லை என்பதும், மேலும் அந்த லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரிந்துள்ளது எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள் காணாமல் போனதாக தக்ஷனா கூறியது பிப்ரவரி மாதம் 18ம் தேதி, ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மார்ச் மாதம் 30 ஆம் தேதி எனவும் 40 நாட்களாக புகார் அளிக்காமல், 40 நாட்கள் கழித்து ஏன் புகார் அளிக்கப்பட வேண்டும்? என காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து போலீசார் தெளிவான விளக்கம் கேட்டபோது, விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் சரியான முறையில் பதில் இல்லை என போலீசார் தகவல் அளித்துள்ளனர். ஒருவேளை நகைகள் திருட்டு போனதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: சென்னையில் செருப்பை திருடிய இளைஞர்கள்..! ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகை