போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை குறைப்பதற்காக சென்னை காவல் துறை பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனினும் இன்னும் முழுமையாகப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
சாலைகளில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவது, மஞ்சள் விளக்கு விழுந்தவுடன் வாகனங்களில் சீறிப் பாய்வது, வெள்ளை கோட்டை தாண்டிவந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவை கட்டுப்படுத்த முடியாத போக்குவரத்து விதிமுறை மீறல்களாகும்.
இவற்றைத் தடுப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் 'ஜீரோ வயலேஷன் ஜங்ஷன் திட்டம்' கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா ஆர்ச், திருவான்மியூர், மாதவரம் ரவுண்டானா ஆகிய நான்கு சிக்னல்களிலும் இந்த ஜீரோ வயலேஷன் ஜங்க்ஷன் அமல்படுத்த தொடங்கினர்.
தற்போது அடுத்தகட்டமாக, சென்னையில உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் ஜீரோ வயலேசன் சந்திப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த ஜீரோ வயலேஷன் ஜங்க்ஷனின் முக்கிய நோக்கம் போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது.
இது போன்று அனைத்து முக்கியமான சந்திப்பிலும் போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை என எப்பொழுதும் 20 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். தலைக்கவசம், சீட் பெல்ட்டுகள் அணியாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தில் 3 பேராகச் செல்பவர்கள், சிக்னலில் வெள்ளை கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள், குறிப்பாக சிக்னலில் மஞ்சள் விளக்கு போட்டவுடன் வாகனங்களில் சீறிப்பாய்வர்களைத் தடுத்து நிறுத்தி உடனடியாக ரூ.500 வரை ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் யாரேனும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் அல்லது தகராறில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டம் ஒழுங்கு காவலர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதற்காக இந்த வாரம் முழுவதும் காவலர்கள் அந்தந்த சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு இந்தத் திட்டம் குறித்து அறிவுரைகளை வழங்குவார்கள்.
அடுத்த வாரத்தில் இருந்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் மீண்டும் ஒரு நபர் விதிமுறைகளை ஈடுபடும்போது அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். அதனால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறைக்கப்படும் எனச் சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பதவிக்கான நடத்தை விதி மீறல்: அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு