சென்னை : சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்து உட்கார்ந்த இடத்திலிருந்தே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். புதிய தொழிற் நுட்பங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே அதனை கையாண்டு மக்களை ஏமாற்றுவதிலும் சைபர் குற்றவாளிகள் கைதேர்ந்தவர்கள்.
குறிப்பாக மோசடி செய்த பணத்தை சைபர் குற்றவாளிகள் முன்பு, வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை செய்த நிலையில், தற்போது கிரிப்டோ கரன்சி, வாலட்டுகள் தொடங்கி பல்வேறு விதமாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எண்ணற்ற மொபைல் எண்கள், விர்ச்சுவல் எண்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளையும் மற்றும் தற்காலிக வெப்சைட்டுகள், பல்வேறு வங்கிக் கணக்குகள் போன்றவற்றையும் உபயோகிக்கின்றனர்.
சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்படுகின்றன. இந்நிலையில் குற்றங்களில் வகைப்படுத்தி வழக்குகளின் உள்ள தகவல்களோடு தொடர்புபடுத்துவதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து கைது செய்ய இயலும் என்பதன் அடிப்படையில், சென்னை காவல்துறை சைபர் அலெர்ட் ஆப் என்ற செல்போன் செயலியை வடிவமைத்துள்ளது.
இந்த ”சைபர் அலெர்ட்” செயலியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் சென்னை காவல்துறையில் சைபர் கிரைம் தொடர்பாக 17939 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பார்ட் டைம் ஜாப்ஸ் தொடர்பாக சென்னை சைபர் கிரைமில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 47 வழக்குகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தடுப்பதற்காக ”சைபர் அலெர்ட் ஆப்” உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயலியைப் பயன்படுத்தி குற்றவாளிகளின் தரவுகள் அதாவது மொபைல் எண்கள், வங்கிக் கணக்குகள் சமூக வலைத்தள கணக்குகள், ஈமெயில், வெப்சைட்டுகள் போன்றவை உள்ளீடு செய்யபடும் போது மொபைல் எண் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மற்ற தரவுகள் தொடர்புடையதாக இருப்பின் இதனை ஒருங்கிணைந்து இது குறித்து தகவல்களை காவல் பிரிவுகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும்.
மேலும் குற்றச்செயல் தொடர்பான அறிக்கைகள்,ஒரே தரவுகள் தொடர்பான அறிக்கைகள் போன்றவற்றை இச்செயலியின் மூலம் எளிதாகப்பெற இயலும். இதன் மூலம் உயர் அதிகாரிகள் சைபர் குற்றத்தரவுகளை கண்காணித்து புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் தனிப்படைகளை அமைத்து அதிக அளவில் குற்றவாளிகளை கைது செய்ய இயலும்.
சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் குற்றத்தரவுகளை ஒருங்கிணைப்பதிலும், அதனைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று தொடர்புடைய குற்றங்களை எடுத்துக்காட்டுவதிலும் இந்த சைபர் அலெர்ட் ஆப் செயலியானது முக்கியப் பங்காற்றும். இதன் மூலம் சைபர் குற்றவாளிகளைக் கைது செய்வது எளிதாகும்.
சென்னை காவல் ஆணையரகத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த சைபர் அலெர்ட் செயலியானது. தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க : போலி பாஸ்போர்ட் வழக்கு: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை