சென்னை: சென்னை ஐஐடியில் பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் மாணவர்கள் சேர்க்கைக்கான இணைய தளத்தினை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, "அனைவரும் அணுகக்கூடியதாக ஐஐடி கல்வியை மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன், பி.எஸ். படிப்பிற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இருப்பதை உறுதிசெய்யும் வகையில் எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உடையவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாடத்திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் மோட்டார் வாகனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில், பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். தற்பொழுது ஆட்டோ மொபைல் துறையில் உள்ளவர்களுக்கும் எலக்ட்ரானிக் சிஸ்டம் தேவைப்படுகிறது.
விருப்பமுள்ள எவரும் வயது வேறுபாடின்றி பி.எஸ் (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பாடத் திட்டத்தில் சேரலாம். விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பில் (அல்லது அதற்கு சமமான) கணிதம், இயற்பியல் ஆகியவற்றை பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஜே.இ.இ. தேர்வின்றி நடத்தப்படும் இந்த பாடத் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேர்வில் தகுதி பெற வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நான்கு வாரங்களுக்கான பாடங்கள் ஐஐடி ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். முழுக்க முழுக்க அந்தப் பாடங்களின் அடிப்படையில் மட்டுமே தகுதித் தேர்வு நடைபெறும். இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் விவாத அரங்குகள், நேரடி வகுப்புகள் போன்றவையும் நடத்தப்படும்.
சென்னை ஐஐடி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து 9 முதல் 12 வகுப்புகளை சேர்ந்த 250 அரசு பள்ளிகளில் பள்ளிக்கு தலா 400 மாணவர்கள் என அடுத்த ஒரு மாத காலத்தில் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் தொடர்பான கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம். 520 அரசு பள்ளி ஆசிரியர்களை இதற்காக தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்துள்ளோம் . பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பேருந்துகளை இயக்க கார்ப்பரேட் நிறுவனங்களா? - சிஐடியு மாநில அரசுக்கு கண்டனம்!